நம்பிக்கை என்பது என்ன? சில மனிதரை நாம் மதிக்கிறோம். அனுபவங்களின் மூலம் சிறிது சிறிதாக அவர்களின் வாக்கும் செயலும் உண்மைக்கு புறம்பாக இருக்காது என்று நினைக்கிறோம். இதுவே நாள்பட உறுதியாகி நம்பிக்கையாக பரிணமிக்கிறது.
நம்பிக்கை ஏற்பட நம்மிடமிருந்தும் சில மூலதனங்கள் தேவை. நாம் பழகுபவருடன் நட்பு பாராட்ட வேண்டும். அவரிடமிருந்த எந்த சலுகையும் எதிர்பார்த்தல் கூடாது. நம் சொல்லும் செயலும் உண்மைக்கு புறம்பாக இருக்க கூடாது. அவருக்கு வேண்டிய உதவியை நம்மால் முடிந்தவரை செய்ய வேண்டும். நம் நம்பிக்கையை பெற ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும்?
நம்மிடம் அவர் பழகுவதில் உண்மையும் அன்பும் கலந்திருக்க வேண்டும். அவர் சொன்னதை செய்பவர் என்று நிகழ்வுகளின் மூலம் நமக்கு தெரிய வேண்டும். நம்மிடம் பெருமை பேசுவதற்கும் மற்றும் பொருள் பெறுவதற்காகவும் அவர் செயல்படுகிறார் என்ற எண்ணம் நமக்கு தோன்றக் கூடாது. அவர் குறையே இல்லாதவர் என்பது தேவையில்லை. ஆனால் உண்மையிலிருந்து பெரும்பாலும் விலகாதவர் என்பது அவசியம்.
நம்பிக்கை வளர காலமே சான்று. ஒரு விதை செடியாகி மரமாக வளர காலம் அவசியம். அதேப்போல் நம்பிக்கை வேரிட்டு திடமாக வளர காலம் தேவைப்படுகிறது. ஒரு பெண் ஆண் ஒருவரை மணக்கிறாள். திருமணம் ஆனவுடன் அவரிடம் நம்பிக்கை உண்டாகி விடுகிறதா என்ன? தம்பதியிடம், அன்பும் பாசமும் முதலில் தோன்ற வேண்டும். விதையை மண்ணில் நட்டால் மட்டும் போதுமா? அதற்கு தினமும் நீர் பாய்ச்ச வேண்டாமா? ஒருவரின் நன்மையை மற்றவர் எதிர்பார்த்து செயல்படும் தன்மை தோன்ற வேண்டும். இவற்றுக்கெல்லாம் காலம் தேவைப்படுகிறது. நாளாக ஆகத்தான் உறவு உறுதிப்பட தொடங்குகிறது. பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் தேவைப் படுகின்றன. மாங்கொட்டையை மண்ணில் நட்டவுடன் மாங்கனி காய்கிறதா என்ன? அதேப்போல்தான் நம்பிக்கைகனி காய்க்க வெகு காலம் ஆகும்.
தொட்டவுடன் செயல் நடக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த காலக்கட்டத்தில் நம்பிக்கை உடனே ஏற்பட வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அனால் நம்பிக்கை ஏற்பட சில உபகரணங்கள் அவசியம். அதில் காலமும் ஒன்று. காலம் கனிந்தப்பின்னே நம்பிக்கை உருவாகும் என்பது திண்ணம். அதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.
நாம் இதுவரை மனிதத் தொடர்பை பற்றி பேசினோம். கடவுளிடம் நம்பிக்கை ஏற்பட என்ன செய்ய வேண்டும் ? கடவுள் நம்பிக்கை மிக கடினமான ஒன்று. கடவுள் தத்துவம் அமானுஷ்யமான ஒன்றைப் பற்றியது. கடவுள் நம் கரணங்களால் உணர முடியாதவர். மனதினால் அவரை கற்பனை செயவதுக்கூட சிரமம். அப்படிப்பட்டவரிடம் நம்பிக்கை வைப்பது எவ்வாறு? கண் பார்வை அற்றவர் மலரின் அழகை ரசிக்க முடியுமா? என்னவென்று தெரியாத ஒன்றை எவ்வாறு அறிந்து உணர்ந்து நம்பிக்கையை வளர்க்க முடியும்?
இதற்குதான் குரு தேவைப்படுகிறார். அந்த குரு எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும்? குருவை வழிக்காட்டி என்று சொல்லலாம். அவர் கடவுளை உணர்ந்திருக்க வேண்டும். அவரை நாடி வருபவர்களின் மன வளர்ச்சிக்கு ஏற்றபடி சுலபமான வழிகளில் கடவுள் நம்பிக்கையை ஊட்டுபவர். இம்மாதிரியான குரு கிடைத்தால் அவரிடம் நம்பிக்கை வைப்பது சுலபம். குரு மூலமாக கடவுள் நம்பிக்கை ஏற்பட்டால் அது நன்கு செழிப்பாக வளரும். அந்த நம்பிக்கை காலத்தால் அழியாது.
தற்போதைய சூழ்நிலையில் அன்மைகாலத்தில் சீரடியில் பக்த பராதீனனாக வாழ்ந்த, ஸ்ரீ சாயிநாத மகாராஜரைப் போன்ற சத்குரு கடவுள் நம்பிக்கை வளர மிகவும் ஏற்றவர். அவரிடம் செலுத்தும் பக்தி சச்சிதானந்த சுவருபனான பரம்பொருளிடம், தீவிர நம்பிக்கை கொள்ளச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.