புதன், 14 மே, 2025

 கடவுளைக் காண முடியுமா?

நாம் அன்றாட வாழ்க்கையில்  வெவ்வேறு விஷங்களைத் தேடி அலைகிறோம். நம்மில் ஒரு சிலரே கடவுளை நினைக்கிறோம். 

நினைவு அல்லது எண்ணம் எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதன் அவசியம் என்ன? மனதிலிருந்து எண்ணங்கள் உற்பத்தியாகின்றன. எண்ணங்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை  நடத்த   அவசியமானவை. நம் எண்ணங்கள் அனுதினமும் நடக்கத் தேவையானவற்றைத்தான் நினைக்கிறது. கடவுள் என்ற ஞாபகமே வருவதில்லை. கடவுள் என்பவர் ஓர் அமானுஷிய சக்தி என்று பெரியவர்கள் சொல்லி நாம் அறிவோம். அதைத் தவிர நமக்கு ஏதும் தெரியாது. கடவுளைக் குறித்து புராணக் கதைகளிலிருந்து தெரிந்துள்ளோம். ஆனால் சொந்த அனுபவம் நமக்கு இல்லை. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் எழுதிய தெய்வீகப் பாடல்கள் மூலம் ஓரளவிற்கு கடவுளின் பெருமையை உணர்கிறோம். நம்மைப் பொறுத்தவரை ஆசைப்படுவதை நிறைவேற்றுபவர் மற்றும் ஆபத்துக் காலங்களில் காப்பாற்றுபவர் கடவுள் என்று நினைக்கிறோம். அதற்கு மேல் அவரைக் காண வேண்டும் என்று நினைப்பதில்லை. முக்கால்வாசி மனிதர்கள் கடவுள் இருக்கிறார் என்பதையே ஒப்புகொள்வதில்லை. ஓரளவு நம்புபவர்கள் கூட கோவில்களில் அவரைக் காண்கிறோமே, அதுவே போதும். என்கிறார்கள். 

ஆனால்  20 ம் நூற்றாண்டிலேயே கடவுளைக் கண்ட பல மகான்கள்  வாழ்ந்துள்ளனர். ஸ்ரீ சாயிபாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி போன்றவர்கள் கடவுளைக் கண்டு அனுபவித்துள்ளார்கள். 


கடவுளைக் காண கீழ் கண்டவை  மிகவும் அவசியம்.

# கடவுள் இருக்கிறார் என்ற தீவிர நம்பிக்கைத் தேவை

# கடவுளிடம் பக்தி மற்றும் ஆழ்ந்த அன்பும் வேண்டும்

#கடவுளைக் நேரே காண வேண்டும் என்ற நெஞ்சத் தவிப்புத் தேவை

ராமகிருஷ்ண பரம ஹம்சர் கூறினார்" நீ தேவியிடம் முறையீடு! அவளை சதா சர்வக் காலமும் கூப்பிட்டு அழு.. "நான் உன்னைக் காண வேண்டும் ! நீ தரிசனம் தராவிடில் என் உயிரை விடுவேன். " என்று புலம்பு. தேவி கண்டிப்பாக ஒரு நாள் உன் முன் தோன்றி அருள் புரிவாள். ஏனெனில் அவள் உன் அன்னை அன்றோ. சேயின் புலம்பலை எவ்வளவு காலம் அவளால் பொறுக்க முடியும்? 

வியாழன், 9 நவம்பர், 2017

மனமடங்கில்....

நம் அன்றாடைய வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களை சந்திக்கிறோம். அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளை தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ சாந்தியையோ தருவதில்லை.

கடைக்கரைக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள்.  கடல் அலைகள் ஆரபாரித்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். இவ்வாறேதான் நம் மனமும் அல்லும் பகலும் இடைவிடாது எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. 

எண்ணங்களால் நாம் என் துன்பப்பட வேண்டும்? எண்ணங்களின் தாக்கம் நம்மை செயல் செய்ய தூண்டுவதால்தான். செயல்களில் சில நன்மை பயக்கின்றன; சில தீமை பயக்கின்றன. புத்தியினால்தான் நன்மை தீமை தன்மையயை நம்மால் அறிய முடியும். எண்ணத்தை செயல்படுத்தும் முன் அதன் விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்திக்காமல் செய்யும் எந்தச் செயலும் இடர்பாடு தரும்.

நாம் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. மக்கள் கூட்டத்தில்                            சட்ட திட்டங்களை அனுசரிக்கும்  நாகரிகமானவர்கள். பலனை எண்ணி நாம் செயல்களை செய்கிறோம்.  அச்செயல் நமக்கு அன்றி மற்றவர்களுக்கும் ஊரு விளைவிக்காததாக இருக்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக் கூடாது. இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். நல்லது கெட்டத்தை எவ்வாறு அறிவது?  அதற்கு நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.

மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன் விளைவுகளை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன எண்ணினாலும், மற்றும் செய்ய நினைத்தாலும், ஒரு குரல் சரி, தவறு என்று கூறுகிறது. அக்குரலே மனசாட்சி.ஒருவருக்கு தீங்கு செய்ய நாம் எண்ணும்போது மனசாட்சி அது தவறு என்றுரைக்கும். அதை அலட்சியம் செய்து தீச்செயலை நாம் செய்தால் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டி வரும்.

நம்மில் பலர் மனதை அடக்க முடிவதில்லை, அது தறிக்கெட்டு ஓடுகிறது , என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையை பழக்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் அது யாரையும் அதன் அருகில் வரவோ ஏறவோ அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி உதைக்கும்.  அதைப் பழக்குபவர் மெல்ல மெல்ல அதன் தேவைகளைக் கவனிக்கத் தொடங்குவார். உணவு கொடுப்பது, லாயத்தை சுத்தம் செய்வது,  அனைத்து பணிகளையும் அவரே செய்வார். குதிரை சிறிது சிறிதாக அவர் வசம் வரும். பிறகுதான் அதன் மேல் ஏறுவது, ஓட்டப் பயிற்ச்சி அளிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவார். மனமும் குதிரையைப் போன்றதே.  அதை அடக்கப் பயிற்சித் தேவை.

நாம் பழகும் மனிதரின் சொல்லும் செயலும், நம் மனதை பாதிக்கின்றன. அவை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. இதைத் தவிர வெளிஉலக நிகழ்வுகளும் நம் மனதை உலுக்குகின்றன. இவற்றால் நம்முள் எண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட மனம் மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு நாம் தீர்வு காண விழைகிறோம். நம்மால் செயல்புரிய  முடியும் விஷயங்களுக்கு தீர்வு காணலாம்.  வெளியுலக நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.   'மனசாந்திக்கு என்ன வழி?' என்பதுதான் நம் பிரச்சனை. 

மனம் எப்போது அமைதியடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம் அமைதியடையும்.  ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகள் குறைந்தால்தான் ஆசைகள் குறையும். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குகிறோம். விலைமிகுந்த தேவையற்ற படோடபமான ஆடைகளை வாங்குகிறோம். பல ஆடைகளை பிறகு அணியாமல் வீட்டிலேயே வைத்திருக்கிறோம். ஒரு தீபாவளிக்கு சாதாரண ஆடைகளை வாங்கி மிச்சப்படும் பணத்தில் ஏழைகளுக்கு நாம் துணி வாங்கித் தரலாமே?

உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை மற்றும் படோடபமின்மையை அனுசரித்தால்  கண்டிப்பாக ஆசைகள் குறையும். வாழ்வின் குறிக்கோள் ஆசைகளை நிறைவேற்றுவது என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் அதன் வழிமுறை தெரியவரும்.

மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில்  மதித் தோன்றிடும்.   மதி என்பதை ஞானம் எனக் கொள்ளலாம். ஞானம் என்பது அறிவின் முதிர்ந்த நிலை. வாழ்வின் உண்மையை உணரும் நிலை அது. மதி தோன்றியதும் நம் பிறவிப் பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். பிறவிப் பயன் "நான் யார்?" என்பதை அறிவதுதான். ஞானத்தால்தான் அதை அறிய முடியும். 'நான்' என்பது இவ்வுடல் அல்ல; மனம், புத்தி, மற்றும் பஞ்சக் கரணங்கள் அல்ல.  அது அனைத்துக்கும் வேறுபட்ட ஆத்மனே ஆகும். அந்த உண்மையை புத்தியினால் அறிய முடியாது. பல வருட சாதனைச் செய்து மனதை அடக்கி முடிவில்தான் அதை அடையலாம். 
    

புதன், 8 நவம்பர், 2017

மனமடங்கில் ........
நம் அன்றாட வாழ்வில் பற்பல இன்பத் துன்பங்களைச் சந்திக்கிறோம். அவற்றின் விளைவாக வரும்காலங்களில் மேலும் பல நிகழ்வுகளையும் தொடர்ந்து அனுபவிக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே நமக்கு நிலைத்து நிற்கும் இன்பத்தையோ சாந்தியையோ தருவதில்லை.

நீங்கள் கடற்கரைக்குச் சென்றிருக்கிறீர்களா? அங்குக் கடல் அலைகள் ஒன்றின்பின் ஒன்றாக ஆரவாரித்துக் கரைக்கு வந்து கொண்டிருக்கும். ஒரு வினாடி நேரம் கூட ஓயாமல் அலைகள் புரண்டு வந்து கொண்டிருக்கும். நம் மனமும் அல்லும்பகலும் ஓய்வொழிவில்லாமல் எண்ண அலைகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.

எண்ணங்களால் நாம் ஏன் துன்பப்பட வேண்டும்? அவை வருவதுடன் நிற்பதில்லை. அவை நம்மைச் செயல் செய்யத் தூண்டுகின்றன. அச்செயல்களில் சில நன்மை பயக்கும்; மற்றும் சில தீமை பயக்கும். எவை நல்லவை, எவை தீயவை என்று அறிய நாம் நம் புத்தியை  உபயோகிக்கிறோம். எண்ணங்கள் தோன்றியதும் சிந்திக்காமல் செயல்படத் துவங்கினால் சமயத்தில் அவை நம்மைப் பெரும் இடர்பாட்டில்  சேர்த்து விடும். எந்தச் செயல் செய்யமுற்படும் முன்னும் அச்செயலின் விளைவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் காட்டில் வாழும் மிருகங்கள் அல்ல. ஓர் ஊரில் மற்ற மக்களுடன் சிலபல சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாகரிக மனிதர்கள். நம் செயல் நமக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமே. ஆனால் அது மற்றவர்க்குத் தீங்கிழைக்குமேயானால் அதை நாம் தவிர்க்க வேண்டும். நம் செயல் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடாது. இதனால்தான் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி செம்மைவழியில் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது நல்லது, எது கேட்டது என்று எப்படி அறிவது? நல்லது, கேட்டது அறிய நம் மனசாட்சியே உற்றக் கருவி எனலாம்.

மனம் எண்ணங்களை உற்பத்தி செய்யும் சாதனம் என்றால் அதன்  தாக்கங்களை அறிய புத்தியை பயன்படுத்துகிறோம். அதன் தன்மையை அறிய மனசாட்சியே சிறந்த துணை. நாம் என்ன நினைத்தாலும் மற்றும் எந்தச் செயல் செய்யும்முன்னும் நம்முள் ஓரு குரல் இது சரி; இது தவறு என்று கூறும். இந்தக் குரலே மனசாட்சி. நாம் ஒருவர்க்குக் கெடுதல் நினைக்கும்போது மனசாட்சி அது தவறு, என்றுரைக்கும். நாம் அதை அலட்சியம் செய்து தீயச்செயல் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

பலர் மனதை எங்களால் அடக்க முடியவில்லை அது தறிக்கெட்டு    ஓடுகிறது என்று சொல்ல கேட்டிருக்கிறோம். ஒரு குதிரையைப் பழக்குவதைப் பார்திருக்கிறீர்களா? முதலில் அது யாரையும் அதன் மேலேற அனுமதிக்காது. அருகில் சென்றால் எட்டி உதைக்கும். அதைப் பழக்குபவர், அதன் தேவைகளை முதலில் தானே கவனிப்பார். குதிரைக்குப் புல் மற்றும் கொள் கொடுப்பது; அதைக் குளிப்பாட்டுவது. தினமும் அதன் இருப்பிடத்தைச் சுத்தம் செய்வது அதன் தேவைகளைக் கவனித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குதிரையை தன்வசப்படுத்துவார்.  பிறகுதான் அதன் மேலேறி அதை ஓட்டப் பழகுவார். மனமும் ஒரு குதிரையைப் போன்றதே. அதை அடக்கப் பயிர்ச்சித் தேவை.

நம் மனதை பல மனிதர்களின் சொல்லும், செயலும், நிகழ்வுகளும்  பாதிக்கின்றன. நம் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் கூறுவது நம் மனதில் பெருமளவில் தாக்கங்களை உண்டாக்குகின்றன. வெளியுலகில் நடைபெறும் சோகநிகழ்வுகள் மற்றும் அசாதாரணச் சம்பவங்களும் நம் மனதை உலுக்குகின்றன. நம் எண்ணங்கள் இவற்றால் உருவாக்கப்படுகின்றன. அலைபாயும் கடலைவிட அது மோசமாகக் கொந்தளிக்க ஆரம்பிக்கிறது. மனதை பாதிக்கும் நிகழ்வுகளுக்குத் தீர்வு காண நாம் விழைகிறோம். நமக்குத் தொடர்புள்ள நிகழ்வுகளுக்கு நம்மால் ஏதாவது செய்ய முடியும். வெளியுலக நிகழ்வுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. மனதை எவ்வாறு சாந்தநிலைக்குக் கொண்டு வருவது என்பதே நம் பிரச்சனை. மனம் எப்போது அமைதியை அடையும்? ஆசைகள் குறைந்தால்தான் மனம் அமைதியாகத் தொடங்கும். ஆசைகளை எவ்வாறு குறைப்பது? தேவைகளை குறைத்தால்தான் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாகத் தீபாவளியின்போது ஒவ்வொரு வருடமும் புத்தாடைகளை வாங்குகிறோம். விலைமிகுந்த படோடமான ஆடைகளாகப் பார்த்து வாங்குகிறோம். முன்பு வாங்கிய துணிகளையே திருப்பித் திருப்பி வாங்குகிறோம். பல ஆடைகளை அணியாமல் வைத்துள்ளோம். ஒரு தீபாவளிக்கு நாம் சாதாரண உடைகளை வாங்கிக் கொண்டு அதில் மிச்சமான பணத்தை ஏழைகளுக்குச் செலவிடலாமே?

உண்ணும் உணவு, வாழ்க்கை நடைமுறை, அனைத்திலும் எளிமை  மற்றும் படடோபத்தைக் குறைத்தால் கண்டிப்பாக ஆசைகள் குறையும். 
வாழ்வின் குறிக்கோள் செல்வந்தனாக ஆவது என்பதற்குப் பதிலாக மனதை அடக்குவது என்று கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மனம் அடங்கும்.

மனமடங்கில் என்ன ஆகும்? மனமடங்கில் மதித் தோன்றிடும். மதி  என்றால் என்ன? மதி என்பது புத்தி. புத்திதான் எப்போதும் இருக்கிறதே அதற்கு மனம் ஏன் அடங்க வேண்டும்? புத்தி என்பது பகுத்தறியும் தன்மை என்று நம் நூல்கள் சொல்கின்றன. நம் புத்தி ஆசைகள் நிறைந்த மனதில், சரிவரச் செயல்படுவதில்லை. ஆசைகள் அடங்கிய நிச்சலனமான மனதில்தான் புத்தி உண்மையாக வேலை செய்யத் தொடங்கும். அந்தப் புத்திக்குதான் மதி என்று பெயர்.

அந்த மதி தோன்றியதும் அதன் மூலம் நாம் நம் பிறவிப்பயனை அடையும் மார்க்கம் தெரியவரும். நம் பிறவியின் முக்கிய நோக்கமே பிறவிப்பயனை அடைவதுதான். பிறவிப்பயன் என்பது என்ன? ‘நாம் யார்?’ என்றறிவதே அது. நாம் இந்த உடல் அல்ல; மனம் அல்ல; பஞ்சக் கரணங்கள் அல்ல; மற்றும் புத்தி அல்ல. அனைத்துக்கும் அப்பால் உள்ள ஆத்மனேயாகும் எனும் அறிவு உண்டாக வேண்டும். அதுவே பிறவிப்பயன். இந்த அறிவு படிப்பதால் ஏற்படாது.      புத்திப்பூர்வமாக உணர்வதால் ஏற்படாது. அது அனுபவரீதீயாக உண்டாக வேண்டும். அதற்குச் சாதனைத் தேவை.          

சனி, 28 அக்டோபர், 2017

உத்தமர்கோர் ஆலயம்

உத்தமர்கோர் ஆலயம்
அனைத்து மனிதரின் செயல்பாடுகளும் சிந்தனையும் ஒத்தத்தன்மை உடையவை. நம் உள்ளத்தில் முதலில் தோன்றுவது ‘நான்’ மற்றும் ‘எனது’ எனும் எண்ணங்களே. தன்னுடைய நன்மைகள் மற்றும் உறவினரின் நன்மைகள் இவற்றிலேயே ஒருவரின் மனம் செல்லும். குடும்ப வாழ்க்கை செல்வத்தைச் சம்பாதித்து அதைச் சேகரிப்பதிலேயே வாழ்க்கை முழுவதும் செலவழிகிறது. இந்த வாழ்க்கைதான் உண்மை. இதில் மேன்மை பெறுவதுதான் லட்சியம் என்று சிறு வயது முதல் போதிக்கப்பட்டு நாம் அதை அடைய பாடுபடுகிறோம். 

ஆனால் உண்மை என்ன? வாழ்க்கை என்பது ஒரு சுழல். அதில் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. விளைவுகளான மகிழ்ச்சியும் வேதனையும் நம்மைத் திக்குமுக்காட செய்கின்றன. நம்மில் யாராவது நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்கிறோமா? நமக்கு என்றும் எப்போதும் மனதில் குறை உள்ளது. நிறைவேறாத ஆசைகள் ஏமாற்றங்கள் என்று பற்பல குறைகள் உள்ளன.

இவற்றுக்கேல்லாம் தீர்வு என்ன? மனம் அடங்குவதே இதற்கு மார்க்கம் எனலாம். மனத்தை அடக்குவது நாய்வாலை நிமிர்த்துவதைப் போன்ற செயலே. மனத்தைச் சிறிது அடக்க முயன்றாலும் அது விஸ்வருபம்  எடுத்துப் பேயாட்டம் ஆடுகிறது. வேண்டாததையே எப்போதும் சிந்திக்கிறது; நல்லதிற்கும் கெட்டதிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஓய்வேயில்லாமல் தூங்கும்போதும் கனவு கண்டு தொல்லை தருகிறது. நிம்மதியும் சாந்தியும் எப்போது ஏற்படுகிறது? மனதில் எண்ணவோட்டம் இல்லாதபோதே சாந்தி கிட்டுகிறது. ஆனால் நாம் அந்நிலையை அடைவது எவ்வளவு கடினமாக உள்ளது?

கடவுள் நாமத்தை உச்சரிப்பதின் மூலம் மனசாந்திப் பெற முடியும்  என்கிறார்கள். ஆனால் அனுபவத்தில் நாமம் ஜபிக்க ஆரம்பித்தவுடன் எண்ண அலைகள் ஆயிரக்கணக்கில் வர ஆரம்பிக்கின்றன. அவற்றை அடக்க முயற்சித்தால் அசுர வேகத்துடன் அவை பல்லாயிரக்கணக்கில் பெருகி கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுக்கின்றன. ஜபம் செய்யும்போதும் தீய எண்ணங்களும் மனதில் முளைகின்றன. அவற்றை அடக்கும் வழி தெரிவதில்லை. இதற்கெல்லாம் தீர்வு என்ன?

ஓரு குழந்தையை எழுதப் பழக்குகிரீர்களா? குழந்தையின் கையைப் பிடித்து மெதுவாக எழுத வைக்க வேண்டும். அது முதலில் மிகவும் சிரமப்படும் நாலைந்து மாதத்திற்குப் பிறகுதான் மெதுவாக எழுத ஆரம்பிக்கும். நம் மனமும் குழந்தையைப் போன்றதுதான். அதைக் குழந்தை என்பதைவிடக் குரங்கு என்றே சொல்லலாம். வினாடிக்கு வினாடி அது ஒரு கிளையிலிருந்து மற்றோன்றுக்குத் தாவும். நாயை பழக்குவது சுலபம்; அதே குரங்கை பழக்குவது மிகக் கடினம்.

மனதை அடக்கப் பொறுமை மற்றும் பழக்கும்திறன் வேண்டும். எதுவுமே செய்யப் பயிர்ச்சி தேவை. சமையல் செய்யத் தொடங்கும்போது  கடினமாகவும் அயர்ச்சி கொடுப்பதாகவும் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் சில மாதங்களில் தேர்ச்சிப் பெற முடியும். மனதை அடக்க அது செல்லும் பாதைகளை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைப் பருவம் மற்றும் வளரும் காலங்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகளின் தாக்கங்கள் மனதில் வடுக்களாக இருக்கும். அவற்றின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் தொடரும். நம் மனம் கடந்தக்காலம், நிகழ்காலம், மற்றும் வரும்காலம்  என்ற மூன்றைப் பற்றியே சிந்தித்து வரும். அதைத் தவிர வேண்டாத கற்பனை மற்றும் கனவுகாட்சிகளும் நம்மைப் பதிப்புக்கு உள்ளாக்கும்.

நம் நாட்டில் பல மஹநீயர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள்  ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள். தாம் உயர்வை அடைந்ததும் மற்றவர்பற்றிக் கவலைக் கொள்ளாமல் அவர்கள் திருப்தி அடையவில்லை. தம் வாழ்க்கையைத் தியாகம் செய்து      பல்லாயிரக்கணக்கானவரை தூய மார்கத்தை அடைவதற்கான வழியைப் போதித்து அவர்கள் வாழ்வு செம்மை அடைய செய்துள்ளார்கள். சாதாரண மக்கட்கு புரியுமாறு பக்தி வழியைப் பாடல்கள் மூலமும் பஜனை பத்ததிகள் மூலமும் போதித்துள்ளார்கள்.

மஹான்களும் நம்மைப் போன்றே சாதாரணக் குடும்பங்களில் பிறந்து வாழ்வில் மிகப்பல துன்பங்களை அனுபவித்துச் செய்வது தெரியாமல் திகைத்துக் கடைசியில் கடவுளே கதி என்று உணர்ந்து அனைத்தையும் துறந்து உன்னத மார்கத்தை அடைந்தார்கள். சமிபகாலத்தில் வாழ்ந்த மஹான்களின் சரிதங்களைப் படித்தால் இந்த உண்மை தெரியவரும். நம்மைப் போன்று சுகங்களைத் தேடி அலையும் சராசரி மனிதர்கள் தொல்லைகளிலிருந்து விடுபட அவர்களின் சரித்திரம் மிகவும் பயன்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்கையும் விதவிதமான சூழ்நிலைகளையும் மற்றும் நிகழ்வுகளையும் கொண்டவை. அதனால் ஒரே நடைமுறை அனைவருக்கும் ஏற்றதல்ல. நமக்கு ஒத்த நடைமுறைகளை நாமேதான் கண்டுபிடித்து அனுசரிக்க வேண்டும்.

உதாரணமாக இருட்டில் நாம் ஒரு கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறோம். எங்குப் போவது என்று திசை தெரியாமல் தவிக்கிறோம். அப்போது திடிரென்று தொலைதூரத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறது. அது ஒரு கடற்கரைவிளக்கத்தின் ஒளி. உடனே நமக்கு அதிகத் தைரியம்வந்து அவ்வொளியை நோக்கி நடக்கத் துவங்குகிறோம்.

மஹான்களும் இவ்விளக்கொளிக்கு ஒப்பானவர்தாம். ஆனால் நம் பொறுப்பு அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் நம் துன்பம் அனைத்தும் உடனே விலகிவிடும் என்றும் நினைப்பது மதியீனம். நமக்குப் பசி ஏற்பட்டால் நாம்தான் உணவை தேடி அலைந்து கண்டுப்பிடித்து உண்ண வேண்டும். மற்றவர்கள் உண்பதால் நம் பசி அடங்காது. மஹான்களை நாம் முன்னேற இலக்குகளாகக் கொள்ளலாம். ஆனால் நாம் நம்மை மாற்றிக் கொள்ளாமல் மஹான்கள் அனைத்தையும் மாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு.

நம்மில் உயர்ந்த மஹான்கள் நமக்கு எவ்விதத்தில் உதவுகிறார்கள்? காரிருளில் அகல்விளக்கு ஒன்றை ஏற்றி வைக்கிறோம். அதன் சிறிய மொட்டு போன்ற சுடர் காண்பவர்க்குத் தைரியத்தையும் மனமலர்ச்சி யையும் தருகிறது. மஹான்களும் அம்மாதிரியே. அவர்களின் தொடர்பு நம்மை இவ்வுலகத் துன்பச்சூழலிலிருந்து உடனே விடுவிக்கிறது. சந்தனக்கட்டை தேய்ந்து தேய்ந்து சுற்றிலும் நறுமணத்தைப் பரப்புகிறது. மஹான்களும் அம்மாதிரியே. அவர்களுடன் பழகுவதால் உலகின் மாயை அகல ஆரம்பிக்கிறது. வாழ்வின் லட்சியம் பொருளின்பம் அல்ல, மனசாந்தியே என்று தெரிய வருகிறது. நம் மனம் மகான்களைத் தொழுகிறது மற்றும் உத்தமர்கோர் ஆலயம் எழுப்ப விரைகிறது.

               

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

பிரார்த்தனை எவ்வாறு செய்ய வேண்டும்?

பிரார்த்தனை என்பது என்ன? உலக வழக்கில் பிரார்த்தனை என்பது நம் ஆசை நிறைவேறுவதர்காக நம் இஷ்ட தெய்வத்திடம் வேண்டுவதானது. இவ் வேண்டுதல் சில சமயங்களில் நிறைவேறுகிறது, மற்றும் பல சமயங்களில் நடப்பதில்லை. நம் மனம் அச்சமயங்களில் வருத்தமுருகிறது. நம்மிடம் எதோ குறை உள்ளது; அதனால்தான் தெய்வம் நம் வேண்டுகோளிற்குச் செவி சாய்க்க மறுக்கிறது என்று நினைக்கிறோம். இது உண்மையான புலப்பாடல்ல.

ஒரு சிறுவன் கடையொன்றில் பளபளப்பான சரிகையில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாயை கண்டு அதை வாங்கித் தின்ன ஆசைப்படுகிறான். அவன் தந்தையிடம் சென்று அதை வாங்கித்தரச் சொல்கிறான். தந்தை அதற்கு மறுக்கிறார். ஏன் என்றால் அந்த மிட்டாய் அவன் உடலுக்குக் கெடுதல் என்று அவருக்குத் தெரியும். அதேப்போலவே கடவுள் நம்முடைய பிரார்த்தனையை ஏற்க மறுப்பது அந்த ஆசை நமக்கு ஊரு விளைவிக்கக் கூடியது என்ற காரணத்தால். ஒரு விதத்தில் பார்த்தால் நாமும் மனதளவில் சிறுவர்களே. நமக்கு எது நல்லது எது கேட்டது என்ற அறிவு போதாது.

நாம் பிரார்த்தனை செய்யாமலேயே பல நல்ல விஷயங்களைக் கடவுள் நமக்கு அருளியுள்ளார். நாம் கேட்காமலேயே நம் தாயும் தந்தையும் தேவையானவற்றைக் குழந்தைப் பருவத்தில் நமக்கு வாங்கித் தரவில்லையா? கடவுளுக்கு நமக்குத் தேவையானவதைப் பற்றித் தெரியும். அவர் கண்டிப்பாக அவற்றை அந்தந்தச் சமயங்களில் கொடுப்பார். நமக்கு இனிப்பு சுவை மிகவும் பிடிக்கும்.ஆனால் இனிப்பையே எப்போதும் உண்டிருந்தால் அது நமக்கு திகட்டிவிடும் அல்லவா? அதேப்போல்தான் இன்பம் மட்டும் நிறைந்திருக்கும் வாழ்க்கை அலுத்துவிடும். துன்பம் மனதை வாட்டினாலும் தைரியத்தையும் திண்மையையும் கொடுக்கும். உடல் பிணியைப் போக்க கசப்பான மருந்து தேவைப்படுவதைப்போல் அவதியும் கஷ்டமும் வாழ்வின் மாயத் தன்மையை அறிந்து கொள்வதற்கு உதவும்.

நாம் மனதை இன்பமாக வைத்துக்கொள்ள இறைவனிடம் ஆசைகளுக்காகப்
பிரார்த்தனை செய்வதை விட்டு, அனைவரின் நலுனுக்காக வேண்ட               வேண்டும்.  "நாங்கள் உம் குழந்தைகள். எங்கள் அனைவரின் நலனையும் காப்பீர்!" என்று நாம் பிரார்த்தித்தால் அந்த மஹாசக்தி கண்டிப்பாகச் செவி சாய்ப்பார். அதில் சந்தேஹமே வேண்டாம்.     

வெள்ளி, 5 ஜூலை, 2013

நம்பிக்கை என்பது என்ன?


நம்பிக்கை என்பது என்ன? சில மனிதரை நாம் மதிக்கிறோம். அனுபவங்களின் மூலம் சிறிது சிறிதாக அவர்களின் வாக்கும் செயலும் உண்மைக்கு புறம்பாக இருக்காது என்று நினைக்கிறோம். இதுவே நாள்பட உறுதியாகி நம்பிக்கையாக பரிணமிக்கிறது.
நம்பிக்கை ஏற்பட நம்மிடமிருந்தும் சில மூலதனங்கள் தேவை. நாம் பழகுபவருடன் நட்பு பாராட்ட வேண்டும். அவரிடமிருந்த எந்த சலுகையும் எதிர்பார்த்தல் கூடாது. நம் சொல்லும் செயலும் உண்மைக்கு புறம்பாக இருக்க கூடாது. அவருக்கு வேண்டிய உதவியை நம்மால் முடிந்தவரை செய்ய வேண்டும். நம் நம்பிக்கையை பெற ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும்?
நம்மிடம் அவர் பழகுவதில் உண்மையும் அன்பும் கலந்திருக்க வேண்டும். அவர் சொன்னதை  செய்பவர் என்று நிகழ்வுகளின் மூலம் நமக்கு தெரிய வேண்டும். நம்மிடம் பெருமை பேசுவதற்கும் மற்றும் பொருள் பெறுவதற்காகவும் அவர் செயல்படுகிறார் என்ற எண்ணம் நமக்கு தோன்றக் கூடாது. அவர் குறையே இல்லாதவர் என்பது தேவையில்லை. ஆனால் உண்மையிலிருந்து பெரும்பாலும் விலகாதவர் என்பது அவசியம்.
நம்பிக்கை வளர காலமே சான்று. ஒரு விதை செடியாகி மரமாக வளர காலம் அவசியம். அதேப்போல் நம்பிக்கை வேரிட்டு திடமாக வளர காலம் தேவைப்படுகிறது. ஒரு பெண் ஆண் ஒருவரை மணக்கிறாள். திருமணம் ஆனவுடன் அவரிடம் நம்பிக்கை உண்டாகி விடுகிறதா என்ன? தம்பதியிடம், அன்பும் பாசமும் முதலில் தோன்ற வேண்டும். விதையை மண்ணில் நட்டால் மட்டும் போதுமா? அதற்கு தினமும் நீர் பாய்ச்ச வேண்டாமா? ஒருவரின் நன்மையை மற்றவர் எதிர்பார்த்து செயல்படும் தன்மை தோன்ற வேண்டும். இவற்றுக்கெல்லாம் காலம் தேவைப்படுகிறது. நாளாக ஆகத்தான் உறவு உறுதிப்பட தொடங்குகிறது. பொறுமையும் சகிப்புத் தன்மையும் அதிகம் தேவைப் படுகின்றன. மாங்கொட்டையை மண்ணில் நட்டவுடன் மாங்கனி காய்கிறதா என்ன? அதேப்போல்தான் நம்பிக்கைகனி காய்க்க வெகு காலம் ஆகும்.
தொட்டவுடன் செயல் நடக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த காலக்கட்டத்தில் நம்பிக்கை உடனே ஏற்பட வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அனால் நம்பிக்கை ஏற்பட சில உபகரணங்கள் அவசியம். அதில் காலமும் ஒன்று. காலம் கனிந்தப்பின்னே நம்பிக்கை உருவாகும் என்பது திண்ணம். அதற்கு பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.

நாம் இதுவரை மனிதத் தொடர்பை பற்றி பேசினோம்.  கடவுளிடம் நம்பிக்கை ஏற்பட என்ன செய்ய வேண்டும் ?  கடவுள் நம்பிக்கை மிக கடினமான ஒன்று. கடவுள் தத்துவம் அமானுஷ்யமான ஒன்றைப் பற்றியது. கடவுள் நம் கரணங்களால் உணர முடியாதவர். மனதினால் அவரை கற்பனை செயவதுக்கூட சிரமம். அப்படிப்பட்டவரிடம் நம்பிக்கை வைப்பது எவ்வாறு? கண் பார்வை அற்றவர் மலரின் அழகை ரசிக்க முடியுமா? என்னவென்று தெரியாத ஒன்றை எவ்வாறு அறிந்து உணர்ந்து நம்பிக்கையை  வளர்க்க முடியும்? 

இதற்குதான் குரு தேவைப்படுகிறார். அந்த குரு  எப்படிப்பட்டவராய் இருக்க வேண்டும்? குருவை வழிக்காட்டி என்று சொல்லலாம். அவர் கடவுளை உணர்ந்திருக்க வேண்டும். அவரை  நாடி வருபவர்களின் மன வளர்ச்சிக்கு ஏற்றபடி  சுலபமான வழிகளில்  கடவுள்  நம்பிக்கையை  ஊட்டுபவர். இம்மாதிரியான குரு  கிடைத்தால் அவரிடம்  நம்பிக்கை  வைப்பது சுலபம். குரு  மூலமாக கடவுள் நம்பிக்கை ஏற்பட்டால் அது நன்கு செழிப்பாக  வளரும். அந்த   நம்பிக்கை காலத்தால் அழியாது.  

தற்போதைய  சூழ்நிலையில் அன்மைகாலத்தில் சீரடியில் பக்த பராதீனனாக வாழ்ந்த, ஸ்ரீ சாயிநாத மகாராஜரைப் போன்ற சத்குரு கடவுள் நம்பிக்கை வளர மிகவும் ஏற்றவர். அவரிடம் செலுத்தும் பக்தி சச்சிதானந்த சுவருபனான பரம்பொருளிடம், தீவிர  நம்பிக்கை  கொள்ளச் செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  


ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நம்பிக்கைதான் மூலதனம்



நம்பிக்கைதான் மூலதனம்

நாம் பலமுறை துன்பங்களை சந்திக்கிறோம். அப்பொழுது மிகவும்
வருத்தப்படுகிறோம்.வாழ்கையின்  மீது வெறுப்பு ஏற்படுகிறது. அடுத்த நிமிஷத்தில் நம்முடைய மனம் நம்மை மீறிய சக்தியை நாடுகிறது.
இம்மாதிரி தருணத்தில்தான் எங்கிருந்தோ உதவி ஒளிக்கீற்றாய்
வருகிறது.


நான் மும்பை நகரத்திற்கு முதல் தடவையாக போயிருந்தேன்.
அப்பொழுது பொறி இயல் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக்   கொண்டிருந்தேன். மும்பை நகர ஆலைகளை காண்பதற்காக என்
 சக மாணவர்களுடன் போயிருந்தேன். என் பெரிய தந்தையின் மகன்
முரளி ஐ .ஐ.டி யில்  படித்துகொண்டிருந்தார்.அவருடைய கல்லூரி
மும்பையில்  பவாய் என்ற இடத்தில் இருந்தது.அது தாதரிலிருந்து
19 கி.மீ. தூரத்தில் இருந்தது.நான் என்னுடைய அண்ணனுடன் தங்க
விரும்பினேன்.என் சகமாணவர்கள். தாதரிலேயே ஒரு   விடுதியில்
தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                                                                                   
தாதர் ரயில் நிலையத்திருக்கு வந்து சேரும்போது மாலை 5.30 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து பவாய் செல்வதற்கு சுலபமான வழி வேறு
நடைமேடைக்கு சென்று லோகல் ரயிலை பிடித்து செல்வதுதான்.
ஆனால்   எனக்கு என்னவோ ஒரு குருட்டு தைரியம். டாக்ஸியில்
 சென்றால் சுலபமாக இருக்கும் என்ற நினைப்பு. அந்த தீர்மானம்
தவறு என்று பிறகுதான் தெரிய வந்தது.


தாதர் ரயில் நிலையத்திருக்கு வெளியே வந்தவுடன் டாக்சி 
ஒன்றைப்  பிடிக்க மிகவும் சிரமப்பட்டேன்.  ஹிந்தி பாஷையில்
பேசவோ மிகவும் கடினமாக இருந்தது.எப்படியோ ஒரு  டாக்சியை 
ஏற்பாடு செய்து அதில் அமர்ந்த பின்தான் மேல்மூச்சு திரும்பி வந்தது.


 .மாலை பொழுது ஆனதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக  இருந்தது. டாக்ஸி ஓட்டுனரும்  என்னுடைய  மும்பை ஞானத்தை 
சோதிப்பதற்காக "இந்த சாலையில் போகட்டுமா ?  இல்லை அந்த 
சாலையில் போகட்டுமா ?"என்று அடிக்கடிக் கேட்டு தொல்லைக் 
கொடுத்துக் கொண்டிருந்தார்.


ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேய்யை அடையும் போது  6-30 
மணியாகி விட்டது.இனிமேல் தொல்லை இல்லை சிறிது கண் 
அயரலாம் என்று தூங்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம்  
தூங்கினேன் என்று நினைவில்லை.ஆனால் வண்டி திடீர் என்று
நின்றபோது  ஏற்பட்ட  குலுக்கலால் கண் முழித்துப் பார்த்தக் 
காட்சி அதிர்ச்சியாக இருந்தது. டாக்ஸி சாலையின்  ஒரு  
ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.ஜன நடமாட்டமே இல்லாத 
இடமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒரு வண்டியும் புலப்படவில்லை. டாக்ஸி ஓட்டுனர் பொறுமையாக 
பான்னேட்டை திறந்து எதையோ குடைந்துக் கொண்டிருந்தார்.


நான் அவரருகில் சென்று என்ன ஆயிற்று என்று வினவினேன். 
"டய்னமோ பயுதாகிவிட்டது.  ரிப்பேர் செய்ய 3 அல்லது 4 மணி நேரம் 
ஆகலாம். இதே சாலையில் நேரே சென்றால் பவாய் ரயில் 
நிலையத்தை அடையலாம். கவலைப் படவேண்டாம் 6 கி. மீ. 
தூரம்தான்." என்று நமுட்டு சிரிப்புடன் கூறினார்.என் விதியை நொந்துக் 
கொண்டே அவர்  கேட்ட வண்டி சத்தத்தையும் கொடுத்து விட்டு  
பொட்டிப் படுக்கையை  தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பொடி 
 நடை போட ஆரம்பித்தேன். இடது கையில் இருப்பதை வலது 
கையிற்கும் வலது கையில் இருப்பதை  இடது கையிற்கும்மாக
மாற்றிக்கொண்டே அரை மணி நேரம் நடந்திருப்பேன். அதற்கு மேல்
கையும் காலும் ஒத்துழைக்க மறுத்து விட்டன.சாலையோரத்தில் 
பொட்டியை போட்டு அதன் மேல் உட்கார்ந்தேன்.

தாகமும் பசியும் மெதுவாக தலைத்  தூக்க ஆரம்பித்தன. இனி
 நடப்பதற்கு சக்தி இல்லை என்று மனம் ஓலமிட  ஆரம்பித்தது.
 எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. வெகு தொலைவில் பவாய் ரயில் 
நிலையத்தின் விளக்குகள் நட்சத்திரங்களை போல  கண் 
சிம்மிட்டிக் கொண்டிருந்தன.என்ன செய்வது என்று தெரியாத 
அந்த நேரத்தில்தான் மின்னல் போன்று உள்ள திரையில் 
ஒரு நினைவு உதயமாகிற்று.


அந்த நினைவு மஹான் ஸ்ரீ சாய்பாபாவை  பற்றியது.
" நீ என்னை பார்த்தால் நான் உன்னை பார்ப்பேன்" என்று அந்த
 மஹான் கூறினது ஞாபகத்திற்கு  வந்தது. "பாபா உங்களை 
தவிர எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இந்த ஆளில்லா
வனாந்தரத்தில் உங்கள் அருள் ஒன்றே என்னை காக்கும் 
ஆயுதம். தயவு செய்து கிருபை செய்யுங்கள் "என்று கண்ணீர் 
 வடித்து வேண்டினேன்,


ஒரு ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். தூரத்தில் மும்பை 
திசையிலிருந்து ஒரு லாரி வருவது தெரிந்தது. என் அருகில் 
அது  வந்தவுடன் கை காட்டி அதை நிறுத்தினேன்.லாரி 
ஓட்டுனரிடம் எனக்கு தெரிந்த கொச்சை ஹிந்தியில் 
என்னுடைய அவதியைக் கூறி பவாய் போக அவருடைய
உதவியை நாடினேன், அவர் என் முகத்தைஅமைதியாக
நோக்கிவிட்டு  " நீங்கள் தமிழர்தானே?" என்றார்.


என் ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை. அவருடன் சகஜமாக தமிழில் பேசியதில் அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும் மும்பைக்கு 
அடிக்கடி வந்து போகிறவர் என்றும் தெரிய வந்தது.அவர் "நான் பவாய் 
போகவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகில் இறக்கிவிடுகிறேன் "
என்றார். நான் உடனே  பதில் பேசாமல் லாரியில் ஏறிக்கொண்டேன்.
அடுத்த இருபது  நிமிடங்களில் என்னை இறக்கி  விட்டார்.அவருக்கு
 நன்றி சொல்லிவிட்டு ரயில் நிலையத்தில் டாக்ஸியை பிடித்து ஐ.ஐ.டி
அடைந்தபோது நேரம் 8 மணி ஆகிவிட்டது.

இரவு படுக்கும் பொது என் மனம் அன்று மாலை நடந்த 
சம்பவங்களை எல்லாம்அசை  போட்டது. எவ்வளவு மோசமான சூழ்நிலையிலுருந்தோம்? எப்படி பாபாவைப்பற்றி ஒரு நிமிடம்
 நினைத்து பிரார்த்தனை செய்ததற்கு உடனே பலனைக் கைமேல்
அளித்தார்? அந்த லாரி எப்படி திடிரென்று அங்கு வந்தது? 
சாதாரணமாக நிற்காத லாரி எப்படி நின்றது?  அதில் தமிழர் ஒருவர் 
எவ்வாறு ஓட்டுனராக இருந்தார்? அவர் மனமிரங்கி  எவ்வாறு 
உதவி செய்தார்?  இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களை 
கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக எனக்குப் பட்டது.                                      


ஒரே பதில்தான் சரியாகத் தோன்றுகிறது. நாம் எவ்வளவு 
நம்பிக்கையை மூலதனமாக கொடுக்கிறோமோ பாபா அதற்கேற்றபடி
பலனை அளிக்கிறார். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.    
             .