ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நம்பிக்கைதான் மூலதனம்



நம்பிக்கைதான் மூலதனம்

நாம் பலமுறை துன்பங்களை சந்திக்கிறோம். அப்பொழுது மிகவும்
வருத்தப்படுகிறோம்.வாழ்கையின்  மீது வெறுப்பு ஏற்படுகிறது. அடுத்த நிமிஷத்தில் நம்முடைய மனம் நம்மை மீறிய சக்தியை நாடுகிறது.
இம்மாதிரி தருணத்தில்தான் எங்கிருந்தோ உதவி ஒளிக்கீற்றாய்
வருகிறது.


நான் மும்பை நகரத்திற்கு முதல் தடவையாக போயிருந்தேன்.
அப்பொழுது பொறி இயல் கல்லூரி இறுதி ஆண்டில் படித்துக்   கொண்டிருந்தேன். மும்பை நகர ஆலைகளை காண்பதற்காக என்
 சக மாணவர்களுடன் போயிருந்தேன். என் பெரிய தந்தையின் மகன்
முரளி ஐ .ஐ.டி யில்  படித்துகொண்டிருந்தார்.அவருடைய கல்லூரி
மும்பையில்  பவாய் என்ற இடத்தில் இருந்தது.அது தாதரிலிருந்து
19 கி.மீ. தூரத்தில் இருந்தது.நான் என்னுடைய அண்ணனுடன் தங்க
விரும்பினேன்.என் சகமாணவர்கள். தாதரிலேயே ஒரு   விடுதியில்
தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்
                                                                                                                   
தாதர் ரயில் நிலையத்திருக்கு வந்து சேரும்போது மாலை 5.30 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து பவாய் செல்வதற்கு சுலபமான வழி வேறு
நடைமேடைக்கு சென்று லோகல் ரயிலை பிடித்து செல்வதுதான்.
ஆனால்   எனக்கு என்னவோ ஒரு குருட்டு தைரியம். டாக்ஸியில்
 சென்றால் சுலபமாக இருக்கும் என்ற நினைப்பு. அந்த தீர்மானம்
தவறு என்று பிறகுதான் தெரிய வந்தது.


தாதர் ரயில் நிலையத்திருக்கு வெளியே வந்தவுடன் டாக்சி 
ஒன்றைப்  பிடிக்க மிகவும் சிரமப்பட்டேன்.  ஹிந்தி பாஷையில்
பேசவோ மிகவும் கடினமாக இருந்தது.எப்படியோ ஒரு  டாக்சியை 
ஏற்பாடு செய்து அதில் அமர்ந்த பின்தான் மேல்மூச்சு திரும்பி வந்தது.


 .மாலை பொழுது ஆனதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக  இருந்தது. டாக்ஸி ஓட்டுனரும்  என்னுடைய  மும்பை ஞானத்தை 
சோதிப்பதற்காக "இந்த சாலையில் போகட்டுமா ?  இல்லை அந்த 
சாலையில் போகட்டுமா ?"என்று அடிக்கடிக் கேட்டு தொல்லைக் 
கொடுத்துக் கொண்டிருந்தார்.


ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேய்யை அடையும் போது  6-30 
மணியாகி விட்டது.இனிமேல் தொல்லை இல்லை சிறிது கண் 
அயரலாம் என்று தூங்க ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம்  
தூங்கினேன் என்று நினைவில்லை.ஆனால் வண்டி திடீர் என்று
நின்றபோது  ஏற்பட்ட  குலுக்கலால் கண் முழித்துப் பார்த்தக் 
காட்சி அதிர்ச்சியாக இருந்தது. டாக்ஸி சாலையின்  ஒரு  
ஓரத்தில் நின்று கொண்டிருந்தது.ஜன நடமாட்டமே இல்லாத 
இடமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒரு வண்டியும் புலப்படவில்லை. டாக்ஸி ஓட்டுனர் பொறுமையாக 
பான்னேட்டை திறந்து எதையோ குடைந்துக் கொண்டிருந்தார்.


நான் அவரருகில் சென்று என்ன ஆயிற்று என்று வினவினேன். 
"டய்னமோ பயுதாகிவிட்டது.  ரிப்பேர் செய்ய 3 அல்லது 4 மணி நேரம் 
ஆகலாம். இதே சாலையில் நேரே சென்றால் பவாய் ரயில் 
நிலையத்தை அடையலாம். கவலைப் படவேண்டாம் 6 கி. மீ. 
தூரம்தான்." என்று நமுட்டு சிரிப்புடன் கூறினார்.என் விதியை நொந்துக் 
கொண்டே அவர்  கேட்ட வண்டி சத்தத்தையும் கொடுத்து விட்டு  
பொட்டிப் படுக்கையை  தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பொடி 
 நடை போட ஆரம்பித்தேன். இடது கையில் இருப்பதை வலது 
கையிற்கும் வலது கையில் இருப்பதை  இடது கையிற்கும்மாக
மாற்றிக்கொண்டே அரை மணி நேரம் நடந்திருப்பேன். அதற்கு மேல்
கையும் காலும் ஒத்துழைக்க மறுத்து விட்டன.சாலையோரத்தில் 
பொட்டியை போட்டு அதன் மேல் உட்கார்ந்தேன்.

தாகமும் பசியும் மெதுவாக தலைத்  தூக்க ஆரம்பித்தன. இனி
 நடப்பதற்கு சக்தி இல்லை என்று மனம் ஓலமிட  ஆரம்பித்தது.
 எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. வெகு தொலைவில் பவாய் ரயில் 
நிலையத்தின் விளக்குகள் நட்சத்திரங்களை போல  கண் 
சிம்மிட்டிக் கொண்டிருந்தன.என்ன செய்வது என்று தெரியாத 
அந்த நேரத்தில்தான் மின்னல் போன்று உள்ள திரையில் 
ஒரு நினைவு உதயமாகிற்று.


அந்த நினைவு மஹான் ஸ்ரீ சாய்பாபாவை  பற்றியது.
" நீ என்னை பார்த்தால் நான் உன்னை பார்ப்பேன்" என்று அந்த
 மஹான் கூறினது ஞாபகத்திற்கு  வந்தது. "பாபா உங்களை 
தவிர எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. இந்த ஆளில்லா
வனாந்தரத்தில் உங்கள் அருள் ஒன்றே என்னை காக்கும் 
ஆயுதம். தயவு செய்து கிருபை செய்யுங்கள் "என்று கண்ணீர் 
 வடித்து வேண்டினேன்,


ஒரு ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும். தூரத்தில் மும்பை 
திசையிலிருந்து ஒரு லாரி வருவது தெரிந்தது. என் அருகில் 
அது  வந்தவுடன் கை காட்டி அதை நிறுத்தினேன்.லாரி 
ஓட்டுனரிடம் எனக்கு தெரிந்த கொச்சை ஹிந்தியில் 
என்னுடைய அவதியைக் கூறி பவாய் போக அவருடைய
உதவியை நாடினேன், அவர் என் முகத்தைஅமைதியாக
நோக்கிவிட்டு  " நீங்கள் தமிழர்தானே?" என்றார்.


என் ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை. அவருடன் சகஜமாக தமிழில் பேசியதில் அவர் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்றும் மும்பைக்கு 
அடிக்கடி வந்து போகிறவர் என்றும் தெரிய வந்தது.அவர் "நான் பவாய் 
போகவில்லை. ரயில் நிலையத்திற்கு அருகில் இறக்கிவிடுகிறேன் "
என்றார். நான் உடனே  பதில் பேசாமல் லாரியில் ஏறிக்கொண்டேன்.
அடுத்த இருபது  நிமிடங்களில் என்னை இறக்கி  விட்டார்.அவருக்கு
 நன்றி சொல்லிவிட்டு ரயில் நிலையத்தில் டாக்ஸியை பிடித்து ஐ.ஐ.டி
அடைந்தபோது நேரம் 8 மணி ஆகிவிட்டது.

இரவு படுக்கும் பொது என் மனம் அன்று மாலை நடந்த 
சம்பவங்களை எல்லாம்அசை  போட்டது. எவ்வளவு மோசமான சூழ்நிலையிலுருந்தோம்? எப்படி பாபாவைப்பற்றி ஒரு நிமிடம்
 நினைத்து பிரார்த்தனை செய்ததற்கு உடனே பலனைக் கைமேல்
அளித்தார்? அந்த லாரி எப்படி திடிரென்று அங்கு வந்தது? 
சாதாரணமாக நிற்காத லாரி எப்படி நின்றது?  அதில் தமிழர் ஒருவர் 
எவ்வாறு ஓட்டுனராக இருந்தார்? அவர் மனமிரங்கி  எவ்வாறு 
உதவி செய்தார்?  இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களை 
கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான காரியமாக எனக்குப் பட்டது.                                      


ஒரே பதில்தான் சரியாகத் தோன்றுகிறது. நாம் எவ்வளவு 
நம்பிக்கையை மூலதனமாக கொடுக்கிறோமோ பாபா அதற்கேற்றபடி
பலனை அளிக்கிறார். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.    
             .              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக