உத்தமர்கோர் ஆலயம்
அனைத்து மனிதரின் செயல்பாடுகளும் சிந்தனையும் ஒத்தத்தன்மை உடையவை. நம்
உள்ளத்தில் முதலில் தோன்றுவது ‘நான்’ மற்றும் ‘எனது’ எனும் எண்ணங்களே. தன்னுடைய
நன்மைகள் மற்றும் உறவினரின் நன்மைகள் இவற்றிலேயே ஒருவரின் மனம் செல்லும். குடும்ப
வாழ்க்கை செல்வத்தைச் சம்பாதித்து அதைச் சேகரிப்பதிலேயே வாழ்க்கை முழுவதும்
செலவழிகிறது. இந்த வாழ்க்கைதான் உண்மை. இதில் மேன்மை பெறுவதுதான் லட்சியம் என்று
சிறு வயது முதல் போதிக்கப்பட்டு நாம் அதை அடைய பாடுபடுகிறோம்.
ஆனால் உண்மை என்ன? வாழ்க்கை என்பது ஒரு சுழல். அதில் நன்மையும் தீமையும் கலந்திருக்கின்றன. விளைவுகளான மகிழ்ச்சியும் வேதனையும் நம்மைத்
திக்குமுக்காட செய்கின்றன. நம்மில் யாராவது நான் இன்று சந்தோஷமாக இருக்கிறேன்
என்று சொல்கிறோமா? நமக்கு என்றும் எப்போதும் மனதில் குறை உள்ளது. நிறைவேறாத ஆசைகள்
ஏமாற்றங்கள் என்று பற்பல குறைகள் உள்ளன.
இவற்றுக்கேல்லாம் தீர்வு என்ன? மனம் அடங்குவதே இதற்கு மார்க்கம்
எனலாம். மனத்தை அடக்குவது நாய்வாலை நிமிர்த்துவதைப் போன்ற செயலே. மனத்தைச் சிறிது
அடக்க முயன்றாலும் அது விஸ்வருபம் எடுத்துப் பேயாட்டம் ஆடுகிறது. வேண்டாததையே
எப்போதும் சிந்திக்கிறது; நல்லதிற்கும் கெட்டதிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை.
ஓய்வேயில்லாமல் தூங்கும்போதும் கனவு கண்டு தொல்லை தருகிறது. நிம்மதியும்
சாந்தியும் எப்போது ஏற்படுகிறது? மனதில் எண்ணவோட்டம் இல்லாதபோதே சாந்தி
கிட்டுகிறது. ஆனால் நாம் அந்நிலையை அடைவது எவ்வளவு கடினமாக உள்ளது?
கடவுள் நாமத்தை உச்சரிப்பதின் மூலம் மனசாந்திப் பெற முடியும் என்கிறார்கள். ஆனால் அனுபவத்தில் நாமம் ஜபிக்க ஆரம்பித்தவுடன் எண்ண அலைகள்
ஆயிரக்கணக்கில் வர ஆரம்பிக்கின்றன. அவற்றை அடக்க முயற்சித்தால் அசுர வேகத்துடன்
அவை பல்லாயிரக்கணக்கில் பெருகி கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுக்கின்றன. ஜபம்
செய்யும்போதும் தீய எண்ணங்களும் மனதில் முளைகின்றன. அவற்றை அடக்கும் வழி தெரிவதில்லை.
இதற்கெல்லாம் தீர்வு என்ன?
ஓரு குழந்தையை எழுதப் பழக்குகிரீர்களா? குழந்தையின் கையைப் பிடித்து
மெதுவாக எழுத வைக்க வேண்டும். அது முதலில் மிகவும் சிரமப்படும் நாலைந்து
மாதத்திற்குப் பிறகுதான் மெதுவாக எழுத ஆரம்பிக்கும். நம் மனமும் குழந்தையைப்
போன்றதுதான். அதைக் குழந்தை என்பதைவிடக் குரங்கு என்றே சொல்லலாம். வினாடிக்கு
வினாடி அது ஒரு கிளையிலிருந்து மற்றோன்றுக்குத் தாவும். நாயை பழக்குவது சுலபம்; அதே
குரங்கை பழக்குவது மிகக் கடினம்.
மனதை அடக்கப் பொறுமை மற்றும் பழக்கும்திறன் வேண்டும். எதுவுமே செய்யப்
பயிர்ச்சி தேவை. சமையல் செய்யத் தொடங்கும்போது கடினமாகவும் அயர்ச்சி
கொடுப்பதாகவும் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதில் ஈடுபடுவதன் மூலம் சில மாதங்களில்
தேர்ச்சிப் பெற முடியும். மனதை அடக்க அது செல்லும் பாதைகளை முதலில் அறிந்து கொள்ள
வேண்டும். குழந்தைப் பருவம் மற்றும் வளரும் காலங்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகளின்
தாக்கங்கள் மனதில் வடுக்களாக இருக்கும். அவற்றின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும்
தொடரும். நம் மனம் கடந்தக்காலம், நிகழ்காலம், மற்றும் வரும்காலம் என்ற மூன்றைப் பற்றியே சிந்தித்து வரும். அதைத்
தவிர வேண்டாத கற்பனை மற்றும் கனவுகாட்சிகளும் நம்மைப் பதிப்புக்கு உள்ளாக்கும்.
நம் நாட்டில் பல மஹநீயர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்துள்ளார்கள். தாம் உயர்வை அடைந்ததும் மற்றவர்பற்றிக்
கவலைக் கொள்ளாமல் அவர்கள் திருப்தி அடையவில்லை. தம் வாழ்க்கையைத் தியாகம் செய்து பல்லாயிரக்கணக்கானவரை தூய மார்கத்தை அடைவதற்கான வழியைப் போதித்து அவர்கள் வாழ்வு
செம்மை அடைய செய்துள்ளார்கள். சாதாரண மக்கட்கு புரியுமாறு பக்தி வழியைப் பாடல்கள்
மூலமும் பஜனை பத்ததிகள் மூலமும் போதித்துள்ளார்கள்.
மஹான்களும் நம்மைப் போன்றே சாதாரணக் குடும்பங்களில் பிறந்து வாழ்வில்
மிகப்பல துன்பங்களை அனுபவித்துச் செய்வது தெரியாமல் திகைத்துக் கடைசியில் கடவுளே
கதி என்று உணர்ந்து அனைத்தையும் துறந்து உன்னத மார்கத்தை அடைந்தார்கள். சமிபகாலத்தில்
வாழ்ந்த மஹான்களின் சரிதங்களைப் படித்தால் இந்த உண்மை தெரியவரும். நம்மைப் போன்று
சுகங்களைத் தேடி அலையும் சராசரி மனிதர்கள் தொல்லைகளிலிருந்து விடுபட அவர்களின்
சரித்திரம் மிகவும் பயன்படும். நம் ஒவ்வொருவரின் வாழ்கையும் விதவிதமான சூழ்நிலைகளையும்
மற்றும் நிகழ்வுகளையும் கொண்டவை. அதனால்
ஒரே நடைமுறை அனைவருக்கும் ஏற்றதல்ல.
நமக்கு ஒத்த நடைமுறைகளை நாமேதான் கண்டுபிடித்து அனுசரிக்க வேண்டும்.
உதாரணமாக இருட்டில் நாம் ஒரு கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருக்கிறோம்.
எங்குப் போவது என்று திசை தெரியாமல் தவிக்கிறோம்.
அப்போது திடிரென்று தொலைதூரத்தில் ஒரு விளக்கொளி தெரிகிறது. அது ஒரு கடற்கரைவிளக்கத்தின்
ஒளி. உடனே நமக்கு அதிகத் தைரியம்வந்து அவ்வொளியை நோக்கி நடக்கத் துவங்குகிறோம்.
மஹான்களும் இவ்விளக்கொளிக்கு ஒப்பானவர்தாம்.
ஆனால் நம் பொறுப்பு அனைத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் நம் துன்பம்
அனைத்தும் உடனே விலகிவிடும் என்றும் நினைப்பது மதியீனம். நமக்குப் பசி ஏற்பட்டால்
நாம்தான் உணவை தேடி அலைந்து கண்டுப்பிடித்து உண்ண வேண்டும். மற்றவர்கள் உண்பதால்
நம் பசி அடங்காது. மஹான்களை நாம் முன்னேற இலக்குகளாகக் கொள்ளலாம். ஆனால் நாம்
நம்மை மாற்றிக் கொள்ளாமல் மஹான்கள் அனைத்தையும் மாற்றுவார்கள் என்று
எதிர்பார்ப்பது தவறு.
நம்மில் உயர்ந்த மஹான்கள் நமக்கு எவ்விதத்தில் உதவுகிறார்கள்? காரிருளில் அகல்விளக்கு ஒன்றை ஏற்றி வைக்கிறோம்.
அதன் சிறிய மொட்டு போன்ற சுடர் காண்பவர்க்குத் தைரியத்தையும் மனமலர்ச்சி யையும் தருகிறது. மஹான்களும்
அம்மாதிரியே. அவர்களின் தொடர்பு நம்மை இவ்வுலகத் துன்பச்சூழலிலிருந்து உடனே
விடுவிக்கிறது. சந்தனக்கட்டை தேய்ந்து தேய்ந்து சுற்றிலும் நறுமணத்தைப் பரப்புகிறது.
மஹான்களும் அம்மாதிரியே. அவர்களுடன் பழகுவதால் உலகின் மாயை அகல ஆரம்பிக்கிறது.
வாழ்வின் லட்சியம் பொருளின்பம் அல்ல, மனசாந்தியே என்று தெரிய வருகிறது. நம் மனம்
மகான்களைத் தொழுகிறது மற்றும் உத்தமர்கோர் ஆலயம் எழுப்ப விரைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக